மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது
கலெக்டர் பிருந்தாதேவி தகவல்
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் மொத்தம் 371 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் சேலம் மாவட்ட அனைத்து நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்சவரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டய படிப்புகள், தொழில் முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், முதுகலை பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவர்கள் கல்விக்கடன் பெறலாம். மாணவர்களுக்கு இந்தாண்டு கல்விக்கடன் வழங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.1 கோடியும், அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் சேர்த்து ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் தகுதியான மாணவர்கள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளையும் அணுகி கல்வி கடன் பெற்று பயன் பெறவும். மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 548 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 223 கோடி பயிர் கடன் உள்பட பல்வேறு கடன் உதவிகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.