நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உட்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2025-06-24 13:43 GMT
கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில், அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2024-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தொடர்புடைய 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் வரும் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Similar News