சேவைக் குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5.40 இலட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5 இலட்சத்து 40 ஆயிரம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2024-10-08 10:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சார்ந்த சிவஞானம் என்பவர் தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். 8 வருடமாக இன்ஸ்யூரன்ஸ் தொகையை முறையாக செலுத்தி பாலிசியை புதுப்பித்து வந்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவிக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் மதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு சிகிச்சைக்கு சேரும் போது பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் சேருவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். பின்பு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இன்ஸ்யூரன்ஸ் தொகையை வழங்க கோரி விண்ணப்பம் செய்துள்ளார். தகுந்த ஆவணங்கள் இல்லாததால் இன்ஸ்யூரன்ஸ் தொகையை இந்நிறுவனம் வழங்க மறுத்துள்ளது. பின்பு கூடுதல் ஆவணங்களை புகார்தாரர் சமர்ப்பித்த பிறகு இன்சூரன்ஸ் நிறுவனம் இ மெயில் மூலமாக பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது. ஆனால் மறு நாளே திரும்பவும் இன்ஸ்யூரன்ஸ் தொகையை வழங்க மறுத்துள்ளது. இதனால் புகார்தாரர் தனது மனைவிக்கான மருத்துவ சிகிச்சைக்கான தொகையை செலுத்திய பின்பு வீடு திரும்பியுள்ளனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலுத்திய பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட தொகை ரூ.4 இலட்சத்து 80 ஆயிரம் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.5 இலட்சத்து 40 ஆயிரம்-ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Similar News