தி.மலை : மக்கள் குறைதீா் கூட்டம் 587 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் காசோலையாக வழங்கினாா்.

Update: 2025-01-07 19:45 GMT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 587 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவா்களின் இருப்பிடத்துக்கே நேரில் சென்று மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 587 மனுக்களை பெற்றுக் கொண்டாா். கூட்டத்தில், சுயதொழில் தொடங்க உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்த வந்தவாசி வட்டம், நம்பேடு ஊராட்சியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி செல்வத்தின் மனு மீது துரித நடவடிக்கை எடுத்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் காசோலையாக வழங்கினாா். உடனடி நடவடிக்கை எடுத்து உதவிய ஆட்சியருக்கு செல்வம் நன்றி தெரிவித்தாா்.

Similar News