சேலம் அருகே 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர்
முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே வீராணம் குப்பனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம் (வயது 60) அங்கு வந்தார். அவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டாள். சிறுமியின் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்ததும் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். போக்சோ சட்டத்தில் கைது பின்னர் அவர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஆறுமுகம் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இதனிடையே அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.