வீரணம்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி 3 ஆடுகள் படுகாயம் - விவசாயிகள் 50 க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
காங்கேயம் வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயி செந்தில்குமார் தோட்டத்தில் பட்டியில் இருந்த 25க்கும் மேற்பட்ட ஆடுகளை துரத்தி கடித்ததில் 3 செம்மறி ஆடுகள், 4 வெள்ளாடுகள் பலியானது. காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
காங்கேயம் அருகே வீரணம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார் (40). விவசாயம் செய்து கொண்டு 25 க்கும் மேற்பட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பட்டியல் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதில் 3 செம்மறி ஆடுகள் மற்றும் 4 வெள்ளாடுகள் பலியானது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் ஆகும். மேலும் 3க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது. இறந்த ஆடுகளுடன் பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் ஊர் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இறந்த ஆட்டின் சடலத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆனது திருச்சி - கோயம்புத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இதனால் இறந்த ஆடுகள் சாலையின் ஓரத்தில் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெறி நாய்கள், விவசாயிகள் வளர்க்கும் ஆடு,கோழிகளை கடித்து கொன்று விடுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும்,விவசாய சங்கங்களும் போராடி வருகின்றனர். மறவம்பாளையம் பஞ்சாயத்து உட்பட்ட செம்மண்குழிபாளையம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார் . கடந்த 13ம் தேதி இரவு ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்தும் துரத்தியும் உள்ளது.இதில் தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதில் 17 ஆடுகள் பலியாகியது. இந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 4 லட்சம் ஆகும். இதே போல் காங்கேயம் அருகே தொட்டிய பட்டியில் 19ம் தேதி ஆட்டு பட்டியில் 70 செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டது. இந்த செம்மறி ஆடுகளை 4 தெரு நாய்கள் புகுந்து கடித்ததில் 27 செம்மறி ஆடுகள் பலியானது. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்தது. இந்த தகவல் காங்கேயம் பகுதியில் உள்ள விவசாயிகளை கலக்கமடைய செய்தது இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பின்னர் அரசு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். ஒவ்வொரு முறையும் ஆடுகள் நாய்கள் கடித்து இறக்கும் பொழுது வட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர்,பேருந்து நிலையம் முன்பு பகுதிகளில் விவசாயிகள் அறவழியில் போராடி வந்தனர் அதே போல் இன்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய முன்பு அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இறந்த ஆடுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதுடன் நாய்களுக்கு ஒரு தீர்வை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயல்முறை படுத்த வேண்டும் என்கின்றனர்.