கோவையில் சந்தன மரங்களை வெட்டிய 8 பேர் சேலத்தில் சிக்கினர்

போலீசார் நடவடிக்கை

Update: 2024-08-13 10:02 GMT
கோவை மாவட்டம் துடியலூர் சாய்பாபா காலனி பகுதியில் சிலர் சந்தன மரங்களை வெட்டுவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துடியலூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதனிடையே அந்த கும்பல் சேலத்துக்கு பஸ்சில் தப்பி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சேலம் மாநகர போலீசாருக்கு, துடியலூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து சேலம் வந்த பஸ்சில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 8 பேர் இறங்கினர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வாழப்பாடி பகுதியை சேர்ந்த சதாசிவம், குமார், வெங்கட்ராமன், மாரப்பன், சுப்பிரமணி, மதி, கந்தசாமி, வரதராஜன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சந்தன மரங்களை வெட்டியவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் சிக்கியது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களும் சேலம் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் 8 பேரையும் சேலம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்டவர்களை போலீசார் துடியலூருக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Similar News