சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு 8 மாத சம்பள பாக்கியை வழங்கக் கோரிக்கை
கோரிக்கை;
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், கடந்த எட்டு மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் நாடியம் முருகானந்தம் அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது, "சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் மிகக் குறைந்த ஊதியமான மாதம் ரூ.250 க்கு பணிபுரியும் குடிநீர்த் தொட்டி இயக்குபவர்களுக்கு உள்ளாட்சி அமைப்பினரின் பதவிக்காலம் முடிந்து கடந்த எட்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. குறிப்பாக நாடியம் ஊராட்சியில் 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதே கிராமத்தை சேர்ந்த 5 பேர் கடந்த இருபது வருடங்களாக இயக்கி வருவதோடு, தொட்டியை சுத்தம் செய்து பராமரிப்பதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணியையும் செய்து வருகின்றனர். 8 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்குவதோடு, அரசு நிர்ணயித்தபடி இவர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவதோடு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.