100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மனு.

100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மனு.

Update: 2024-12-16 09:53 GMT
100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மனு. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடப்பது வழக்கம். இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, புங்கம்பாடி மேற்கு ஊராட்சி அருகே உள்ள தடா கோவில் பகுதியில் வசிக்கும் கலையரசன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். இவர் அரவக்குறிச்சி அதிமுக ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புங்கம்பாடி மேற்கு ஊராட்சி மன்ற தலைவராக தமிழரசி என்பவர் செயலாற்றி வருகிறார். இவர் தனது ஊராட்சி பகுதியில் நடக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனது மனைவி திலகவதியின் பெயரில் 100 நாட்கள் வேலை திட்ட பணியாளர் என்ற பெயரில் அடையாள அட்டை பெற்று, மனைவியின் கையெழுத்தை ஊராட்சி மன்ற தலைவரே பதிவு செய்து மோசடி செய்ததாக கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்தார். அந்த மனுவில் தனது மனைவி அனைத்து ஆவணங்களிலும் ஆங்கிலத்தில் கையெழுத்து செய்பவர் எனவும், ஆனால் மேலே கண்ட போலியான 100 நாள் பணிக்கான அட்டையில், தமிழில் தன் மனைவியின் கையெழுத்தை ஊராட்சி மன்ற தலைவரே பதிவு செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோசடி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களை பெற்ற பிறகு தனக்கு தெரிய வந்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல், இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவதாக தெரிவித்தார்.

Similar News