புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார் : அமைச்சர் பி.கீதா ஜீவன் தகவல்!
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார் என அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார் என அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (17.12.2024), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்” வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செயல்படுத்தப்படவுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான முன்னேற்பாட்டுக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவிக்கையில், பெண்கள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்து, இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்நதவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிக்கல்வியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3387 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2024-2025ஆம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும்; அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2023-2024ஆம் கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்ற 4408 மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று வருகின்றனர். எனவே, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 30.12.2024 அன்று தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கவுள்ளார்கள். ஆகையால், தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மாணவிகளும் பயன்பெறுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவிகளின் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து, தேவையிருக்கும் பட்சத்தில் வங்கியாளர்களின் முகாம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மாபெரும் திட்டமான 'தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளது தேதி வரை 6372 மாணவர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) சகாய ஜோஸ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் மு.நந்திதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.