100 ஆண்டுகள் பழமையான வண்டிப்பாதை மறிப்பு: மார்க்சிஸ்ட் மாநில செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்கா பொன்னேரி கைகாட்டி பகுதியில், பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதை மறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பி.சண்முகம் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற நிதியளிப்பு பேரவை கூட்டத்தில், பொன்னேரி கைகாட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை சில தனிநபர்கள் வேலி அமைத்து, தென்னை மற்றும் வாழை மரங்கள் நட்டு பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடையிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டெடுக்க வேண்டும் என மாநில செயலாளர் தோழர் பி.சண்முகம் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது. மேலும், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பி.டெல்லிபாபு (Ex.MLA) மற்றும் மாவட்டக்குழு செயலாளர் தோழர் எஸ்.கந்தசாமி ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக முன்பே DRO தலைமையில் ஒரு முறை மற்றும் RDO தலைமையில் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், பொதுமக்களுக்கு ஏற்ற உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவே, இவ்விவகாரத்தை முழுமையாக விசாரித்து உரிய தீர்வு காண மாநில செயலாளர் தலையிட வேண்டும் என பொன்னேரி கைகாட்டி ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.