106 அரங்குகளுடன் கோலாகலமாக தொடங்கியது புத்தகத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை 4-வது புத்தகத் திருவிழாவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-02-21 12:27 GMT
சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப் பள்ளியில், இன்று (21.02.2025) சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், 4-வது புத்தகத் திருவிழாவினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை) மற்றும் மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புக்கள் உள்ளது. அதில் கூடுதலாக, சிறப்பு சேர்க்கின்ற வகையில், தற்போது சிவகங்கையில் கடந்த மூன்று ஆண்டுகள் வெகு சிறப்பாகவும், பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும் வகையில் நடைபெற்ற சிவகங்கை புத்தகத் திருவிழா,சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. அதேபோன்று, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, இவ்வாண்டும் 4-வது புத்தகத் திருவிழாவினை பபாசி நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக தொடங்கியுள்ளது சிறப்புக்குறியதாகும் தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில் ஒன்றாக புத்தகத் திருவிழா தனி அங்கம் வகிக்கிறது. புத்தகத் திருவிழா என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நமது முன்னோர்கள் கல்லிலும் மண்ணிலும் தங்களது எழுத்துக்களால் வரலாற்றுச் சுவடுகளை பதிவு செய்துள்ளனர். பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுதினர். ஒவ்வொரு காலகட்டத்தில் பரினாம வளர்ச்சிப் பெற்று, வரலாற்று சிறப்பம்சங்களை அறிந்து கொள்வதற்கு புத்தகங்கள் அடிப்படையாக இருக்கின்ற வகையில் வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும், பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கான சுரங்கம் தான் புத்தகங்கள். அப்படிப்பட்ட புத்தகங்களை இளைய தலைமுறையினர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் புத்தக வாசிப்பினை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். படிப்பதற்கு வயதில்லை . கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற அடிப்படையில் நாளுக்கு நாள் படிப்பதன் மூலம் நமது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொவரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. அதற்கு அடிப்படையாக புத்தகம் அமைகிறது. இதனை படைப்பாளிகள் படைக்கிறார்கள். அதனை பதிப்பாளர்கள் வெளியிடுகின்றனர். புத்தகம் வாசிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பதை மாணவ, மாணவியர்கள் கருத்தில் கொண்டு, தங்களது திறன்களின் அடிப்படையில், சிந்தித்து நிறையப் புத்தகங்களை எழுதி தங்களது அறிவுத்திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவினை போற்றிடும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் சென்னை கோட்டூர்புரத்தில் நூலகம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். அதேபோன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை போற்றிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் மிக பிரம்மான்டமான கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தினையும் கடந்தாண்டு திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்கள். மேலும், டிஜிட்டல் மயமாகும் இக்காலகட்டத்திலும் என்றும் அழியாமல் நீடித்த நிலைத்த ஆயுளுடன் இருப்பது புத்தகங்கள் மட்டும் தான். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கருத்தில் கொண்டு, சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களாகிய படைப்பாளர்களுக்கும் மற்றும் பதிப்பாளர்களுக்கும் பயனுள்ள வகையிலும், புத்தக விற்பனையை அதிகபடுத்துவதற்கும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா வெகுசிறப்பான பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெறுகிறது. அதன்படி, பெருநகரமான சென்னைக்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்ட புத்தகத் திருவிழா நடைபெற்ற சிறப்புக்களும் உள்ளது. தற்போதும் 4-வது முறையாக சிவகங்கையில் இன்றையதினம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவில், 90 அரங்குகள் புத்தகக்கண்காட்சிகளுக்கும், பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் 12 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்நகரங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாவைவிட அனைத்து வசதிகளையும் இதில் ஏற்படுத்தி, பொழுதுபோக்கு சாதனங்கள், பாரம்பரிய உணவுகள் போன்றவைகளை ஏற்படுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக 4-வது புத்தகத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து, இதில் இடம் பெற்றுள்ள அனைத்தையும் கண்டு களிப்பதுடன், எதிர்கால சந்ததியினர்களாகிய தங்களது குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில், அவர்கள் விரும்பும் பல்வேறு வகையான புத்தகங்களை ஒரே இடத்தில் பெறுவதற்கும் நாம் உறுதுணையாக இருந்திட வேண்டும். சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளும் தங்களது பங்களிப்பையும் ஏற்படுத்திடும் பொருட்டு, தங்களது பகுதிகளுக்குட்பட்ட நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு புத்தகங்களை இப்புத்தகத் திருவிழாவின் வாயிலாக நன்கொடையாக வழங்கிட முன்வர வேண்டும். இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளிலுள்ள நன்கொடையாளர்களும் தங்களது பங்களிப்பை இதில் ஏற்படுத்தி சிறப்பு சேர்த்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இவ்விழாவில், சிவகங்கை தமிழ்ச்சங்கம் சார்பில் நிறுவனத்தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ”தவத்திரு குன்றக்குடி அடிகளார் 100 ” என்ற நூலினையும், மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ள வகையில் திருக்குறளை கவிதை வடிவில் நூலாய் வடித்த நூலாசிரியர் முனைவர் முருகேசுவரி அவர்கள் எழுதிய ”இருவரி-அறநெறி” என்ற நூலினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொண்டு, கலையரசி பட்டம் வென்று சாதனை படைத்த, கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லேனாக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5,000 ஊக்கத்தொகையினையும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலைத்திருவிழா போட்டிகளில் முதல் முறையாக சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த மேற்கண்ட மாணவி கலையரசி பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற என்.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ ஜனனிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினையும், குழு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துகழுவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, தென்னந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் அதிகளவில் கலந்து கொண்டனர்.

Similar News