135 ரேஷன் கடைகளில் வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்!
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 135 ரேஷன்கடைகளில் வெள்ள நிவாரண நிதி இன்று வழங்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களிலும் வசிக்கும் பொது மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து செயல்படுத்தி வந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் நிவாரணம் வழங்கும் படி அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் துவங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் குடும்ப அட்டைகளை எடுத்து வந்து பொதுமக்கள் வரிசையில் நின்று நிவாரணத் தொகை 6 ஆயிரத்தை பெற்று செல்கின்றனர்.
நியாய விலை கடைகளில் எந்தவித சலசலப்பு ஏற்படாத வண்ணம் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மட்டும் 2940 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 135 நியாய விலை கடைகள் மூலம் ஒரு லட்சத்து 31,149 குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் எழுபத்தி எட்டு கோடியே 68 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.