டிராக்டர் - பஸ் விபத்தில் 15 பேர் படுகாயம்
ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலை நெசல் கூட்ரோடு அருகே டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதியதில், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரணி ;- மதுரையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ்சில் திருப்பதிக்கு சென்றனர். பஸ்சை தஞ்சாவூரை சேர்ந்த விக்டர் என்பவர் ஓட்டி சென்றார்.சாமி தரிசனம் முடிந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலை நெசல் கூட்ரோடு அருகே வரும்போது சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேல் சிகிச்சைக்காக 4 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.