2¾ லட்சம் பேருக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும்

மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தகவல்

Update: 2024-08-23 03:26 GMT
சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய குடற்புழு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சேலம் மாநகராட்சி பகுதியில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதியில் மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 550 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். குடற்புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் குடற்புழுக்கள் அழிக்கப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்கப்படுகிறது. மேலும், பள்ளி வருகை நாட்கள் அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபகத்திறன், சிந்திக்கும் திறன் மேம்படுத்த உதவுகிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும்அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். குடற்புழு மாத்திரை வழங்க அனைத்து பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகர சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகள் வருடத்திற்கு 2 முறை வழங்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 30-ந்தேதி மாத்திரை வழங்கப்படும். 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ½ மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரை வழங்கப்படும். குடற்புழு மாத்திரையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இம்மாத்திரையினால் எந்த ஒரு பக்கவிளைவு இல்லை. மேலும், குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைக்கு சென்று வந்த உடன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். பொது வெளியில் நடக்கும் போது காலணிகள் அணிந்து நடக்க வேண்டும். காய்கறி மற்றும் கீரை வகைகளை நன்றாக கழுவி வேக வைத்து சாப்பிட வேண்டும். இதனால் குடற்புழு தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News