2 வதுநாள் சோதனை தொடர்கிறது
ஈரோட்டில் 2 -வது நாளாக இன்று எடப்பாடி பழனிசாமி உறவினர் அலுவலகம் - வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை
ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஈரோட்டை தலைமையிடமாக கொண்ட கட்டுமான நிறுவனத்தில் நேற்று கோவையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு விடிய விடிய நடந்தது.இந்நிலையில் ஈரோடு கஸ்பாபேட்டையில் உள்ள ராமலிங்கம் வீட்டிலும் கோவையில் இருந்து காரில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான தனியார் கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமானவரித் துறையினர் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரான ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் அரவை ஆலையிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய ஆவணங்கள் இதுவரை கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. சோதனை முடிவில் தான் முழு தகவலும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் வீடு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.