2026 சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டி? வெளியான பரபரப்பு அறிக்கை
கலை உலகப் பயணமும், அகரம் அறக்கட்டளையும் போதுமான நிறைவை தந்துள்ளதால், அரசியல் பயணம் குறித்து நடிகர் சூர்யா சிந்திக்க வேண்டிய தேவை எழவில்லை என சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.;
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிட உள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அதனை சூர்யா தரப்பு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சமுக வலைதலங்களில் தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து அவரது நற்பணி இயக்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சூர்யா தனது 50-வது பிறந்த நாளை அவரது இல்லத்தில் ரசிகர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார். அன்றைய தினமே அவர் நடித்த கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து அகரம் விதைத் திட்டத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றது இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனிடையே, நடிகர் சூர்யா அடுத்த கட்டமாக வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி பொய்யான தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது. இது உண்மைக்கு மாறான தகவல். அதுமட்டுமின்றி சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும், அகரமும் அவரது வாழ்விற்கு போதுமான நிறைவை தந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு கூட சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கப்பட்டது. அதற்கு காரணமானவர்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றி. சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான நபர்களின் வாழ்த்துகளுடன் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவார். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி சூர்யா பற்றி வெளியான தகவலை திட்டவட்டமாக மறுக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.