திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 236 பேர் தேர்ச்சி
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் நீட் தேர்வில் 236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர் மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வுகள் கடந்த மே 5-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் 24 லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றனர்.
தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் தேர்வர்களுக்கு பிரத்யேக தொடர் பயிற்சி வகுப்புகளை கடந்த ஆண்டுகளை போலவே நடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த் 464 மாணவர்கள் தேர்வை எழுதினர்.
இதில் ஊதியூர் சாந்திநிகேதன் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சஞ்சய், 687 மதிப்பெண் பெற்று, அரசு உதவி பெறும் பள்ளி அளவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அதேபோல் திருப்பூரை சேர்ந்த பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வி. ரூபஸ்ரீ 441 மதிப்பெண் பெற்று அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
கணபதிபாளையம் அரசுப்பள்ளி மாணவி வி.பவானி 2-வது முயற்சியில் 650 மதிப்பெண் பெற்றார். திருப்பூர் மாவட்டத்தில் 464 தேர்வர்களில் 236 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் உட்பட நீட் தேர்வை 2,250 பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது.