ஒரகடத்தில் வழிப்பறி 3 பேர் கைது
ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது
Update: 2024-02-17 08:57 GMT
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பணி முடிந்து இரவு நேரங்களில் இருப்பிடம் திரும்பும் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, வழிப்பறி, மொபைல்போன் பறிப்பு உள்ளிட்டவை அதிகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 9ம் தேதி இரவு, தொழிலாளர்கள் நான்கு பேரிடம் வெவ்வேறு இடங்களில், பைக்கில் வந்த மூன்று பேர் வழிமறித்து மொபைல் போன்களை பறித்து தப்பினர். அப்போது, மர்ம கும்பல் கத்தியால் தாக்கி மிரட்டிச் சென்றுள்ளனர். புகாரின்படி ஒரகடம் போலீசார் விசாரித்தனர். தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், காரணித்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரிஷத் குமார், 24, அவரது தம்பி யுவனேஷ் குமார், 20, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 19, ஆகிய மூன்று பேர் வழிப்பறி செய்ததை கண்டுபிடித்து, அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.