வெள்ள மீட்பு பணிக்காக 300 தூய்மை பணியாளர்கள் தூத்துக்குடி பயணம்
தூத்துக்குடி மழை வெள்ள மீட்பு பணிக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் 300 பேர் பேருந்துகள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி மழை வெள்ள நிவாரண பணிக்காக 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள்,
உதவி செயற் பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 300 க்கு மேற்பட்டோர் 3 பேருந்துகள் மூலம் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வழியனுப்பி வைத்தார். மேலும் தூய்மை பணிக்காக உபகரணங்களுடன் 5 கனரக வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.