4 மாவட்ட பட்டாசு தொழிலாளர்களுக்கு விழுப்புரத்தில் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
விழுப்புரத்தில் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கீழ் இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், ' வெடிபொருள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டத்தின்படி பாதுகாப்பு வழிமுறைகளை பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டும்' என்றார்.டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன், 'வெடி மருந்து ரசாயனங்களை பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் முந்தைய விபத்துகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடம்' என்ற தலைப்பில் பேசினார்.விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கர், தீ விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசர கால நடவடிக்கைகள் குறித்து பேசினார். பட்டாசு தொழிற்சாலைகளில் தீயணைப்பான்கள் இயக்குவது குறித்து முன்னாள் மெர்சைண்டு நேவி தலைமை பொறியாளர் பரந்தாமன் செயல்முறை விளக்கம் அளித்தார்.விழுப்புரம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் பர்வதம், கடலுார் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் பட்டாசு உற்பத்தியில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து பயிற்சி அளித்தனர்.தொழிலாளர் பிரதிநிதிகளாக விழுப்புரம் மாவட்டம் ராஜசேகரன், கடலுார் மாவட்டம் ரவிச்சந்திரன் பேசினர். பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறும்படம் திரையிடப்பட்டது. பயிற்சி வகுப்பில் பங்கேற்ற விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பட்டாசு தொழிலாளர்கள் 279 பேருக்கு பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட வானவெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மொய்தீன் சுல்தான் நன்றி கூறினார்.