அமலி நகரில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு : அமைச்சர் துவக்கி வைப்பு
மீனவர்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி அமலிநகர் மீன் இறங்குதளத்தில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்பு மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து கல்வெட்டினை திறந்து வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தலின்பேரில் நிதி ஒதுக்கப்பட்டு அமலிநகரில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே அமலிநகரில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு முழுக்காரணம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தான். தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை சரிசெய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். உங்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும்.பெரு நிறுவன சமுதாய பொறுப்பு நிதியில் இருந்து மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.9.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கும், திருச்செந்தூரில் ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.மேலும்; கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாடு மீன் இறங்குதளத்தில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவினை நீட்டிக்கும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினால். அதனைத்தொடர்ந்து பெரியதாழையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சென்னை அரசு முதன்மை செயலாளர் / ஆணையர் கன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை துணைவேந்தர் செல்வக்குமார், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய விரிவாக்க கல்வி இயக்குநர் வே.அப்பாராவ், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சஞ்சீவிகுமார், உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மது ஆலிம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.