பள்ளிகளை தேடிச்சென்று, தேசியக்கொடி வழங்கும் மளிகைக் கடைக்காரர்
பள்ளிகளை தேடிச்சென்று, தேசியக்கொடி வழங்கும் சமூக ஆர்வலர் மளிகைக் கடைக்காரர்
By : King 24x7 Website
Update: 2024-01-24 17:56 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வி.விஜயகுமார் (வயது 65), இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தேடிச்சென்று தேசியக்கொடிகளை வழங்கி வருகிறார். இந்த ஆண்டு 29 ஆவது ஆண்டாக, பள்ளிகளுக்கு துணியினால் ஆன தேசியக்கொடிகள், பேப்பர் கொடி, சட்டையில் குத்திக் கொள்ளும் ஸ்லிப் வடிவிலான தேசியக்கொடி, தேவையான குண்டூசி என வழங்கி வருகிறார். இதற்காக ஒவ்வொரு முறையும் ரூ.55 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் தனது சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்து வருகிறார். இதுவரை தனியார் மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகள் 385க்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 155க்கும் இதுபோல் தேசியக்கொடி வழங்கி வருகிறார். அவர் இதற்காக, 1 லட்சத்து 20 ஆயிரம் ஸ்லிப் வடிவிலான கொடி மற்றும் குண்டூசி, 10 ஆயிரம் பேப்பர் கொடி மற்றும் 200 துணி கொடி ஆகியவற்றை பள்ளிகளுக்கு வழங்கியதாக தெரிவித்த அவர், தான் உயிர் உள்ளவரை இதனை தொடரப் போவதாகவும் தெரிவித்தார். பள்ளிகளை தேடிச் சென்று தேசிய கொடிகளை வழங்கி வரும் மளிகை கடைக்காரர் விஜயகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.