மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நடமாடும் மருத்துவ குழுவினர் இருக்க வேண்டும் - ஆட்சியர் உத்தரவு
மக்கள் அதிகம் கூடுவதால் மருத்துவ குழுவினர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
Update: 2023-12-12 02:13 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெற்றது, இக்கூட்டத்தில் அரும்பாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிவிட்டு, திரும்பிச் செல்லும் போது திடீரென்று மயக்கமடைந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி அவரை உடனடியாக அரசு வாகனத்தில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கினார்கள். குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததால் திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, இனிவரும் காலங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் நாட்களில், பொதுமக்கள் அதிகம் வருவதால் இதுபோன்ற சம்பவங்களில் துரிதமாக செயல்பட நடமாடும் மருத்துவக் குழுவினர் இருக்க வேண்டும் என்று ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.