போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

Update: 2023-12-06 07:57 GMT

ஆய்வு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை;- அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்காகவும் திருவண்ணாமலை நகருக்கு தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். முந்தைய காலங்களை விட தற்போது நகருக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நேரத்தில் அதிகளவிலான நபர்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் நிலையில், அதற்கேற்றவாறு போக்குவரத்து நெரிசலினை தவிர்க்க தமிழ்நாடு அரசால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக புதிய பேருந்து நிலையம் அமைத்தல், திருக்கோயிலுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு மாற்றாக காந்திநகரில் புதிய கடைகள் கட்டித்தருதல், வாகனங்களை நிறுத்துமிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தி தருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகரில் போக்குவரத்தினை முறை செய்து வாகன நெரிசலினை தவிர்க்கும் பொருட்டு  மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் காவல் துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை. அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நிர்வாகம், நகராட்சி உள்ளிட்ட அரசு துறைகளுடன் வியாபாரிகள் சங்கம், உணவகஃ தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகிய சங்கங்களும் கலந்து கொண்டன. மேற்படி ஆய்வுக்கூட்டத்தில், திருவண்ணாமலை நகரின் போக்குவரத்தினை முறைப்படுத்தி வாகன நெரிசலினை குறைப்பதற்காக நகருக்குள் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருகை தரும் நேரம் நிர்ணயம் செய்தல், கடைகளை சாலை வரை நீட்டித்தலை தடைசெய்தல், நகரில் வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தனியார் உணவகம்.. தங்கும் விடுதிகள் வாகன நிறுத்துடமிங்கள் முறைப்படுத்தல், ஆட்டோ நிறுத்துமிடங்கள் முறைப்படுத்தல், வெளியூர் ஆட்டோக்கள் நகருக்குள் இயங்குவதை தடை செய்தல், திருக்கோயில் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நிர்வாகம்,திருவண்ணாமலை நகராட்சி ஆகிய அரசு துறைகளின் அலுவலர்கள், வியாபாரிகள் சங்கம், உணவக தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் பிரதநிதிகள் மற்றும் தொடர்புடைய பகுதிகளின் உள்ளாட்சி பிரதநிதிகள் ஆகியோர்களை கொண்டு உப குழு ஏற்படுத்தி அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றினை களைவதற்காக வழிமுறைகளை பரிந்துரைகளை பெற்று, அதனடிப்படையில் செயல்திட்டம் தயார் செய்து அதனை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், நடைமுறை சிக்கல்களை களைய வாரம் தோறும் குழுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வியாபாரிகள் சங்கம், உணவக தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News