கோவையில் ஆட்டோவின் மேற்கூறையில் கீற்று தடுப்பு அமைத்த ஆட்டோ ஓட்டுனர்
கோவையில் ஆட்டோவின் மேற்கூறையில் தென்னங்கீற்று தடுப்பு அமைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கோவை நகரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் வெயிலின் தாக்கம் நிலவி வரும் நிலையில் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வக்குமார் என்பவர் தனது ஆட்டோவின் மேற்பகுதியில் தென்னங்கீற்றுகளால் ஆன தடுப்பை அமைத்து ஆட்டோவை இயக்கி வருகிறார்.
இந்த ஆட்டோவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆட்டோவில் பயணிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாகவும் வெயிலின் தாக்கத்தை குறைக்க இப்படி செய்து இருப்பதாக ஆட்டோ ஓட்டுனர் செல்வகுமார் தெரிவித்தார். ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் திருப்தியடைவதாகவும் ஆட்டோவிற்குள் வெப்பம் இல்லை என பயணிகள் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இயற்கையான முறையில் வெப்பத்தை தடுக்க ஆட்டோ ஓட்டுனரின் இந்த முயற்சி நன்றாக இருப்பதாகவும் ஆட்டோவில் பயணிக்கும் போது வெப்பம் இருப்பதே தெரியவில்லை எனவும் ஆட்டோவில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.தென்னை ஓலையினை பயன்படுத்தி இயற்கை முறையில் வெப்பத்தை தடுக்க ஆட்டோ ஓட்டுனர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.மேலும் கோவையில் இந்தளவு வெயிலை பார்த்ததே இல்லை எனவும் தற்பொழுது இந்த வெயில் புதிதாக இருப்பதாகவும் கோவை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்டோவில் பயணிக்க கட்டணம் என்பதை தாண்டி தனது ஆட்டோவில் பயணிக்கும் குழந்தைகளும், பெரியவர்களும் வெப்பத்தில் அவதிபடக்கூடாது என்பதற்காக ஆட்டோ ஓட்டுனர் செல்வகுமார் செய்துள்ள இந்த முயற்சி அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.