சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின், விருத்தாசலம் மாநில பிரதநிதித்துவ பேரவை அறைகூவலின்படி, சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறையின் அலுவலர், உதவியாளர், இரவுக் காவலர் பணியிடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, பதவி உயர்வு மூலம், அனைத்து மக்கள் நலப் பணியாளர்களையும் பணியமர்த்த வேண்டும். கணினி உதவியாளர்களை பணிவரன் முறைப்படுத்தி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதியம் மற்றும் அனைத்து விடுப்புகளையும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனைவரையும் இணைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கை. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வீராச்சாமி, ஒன்றியச் செயலாளர் திருச்செல்வம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்க வட்டார தலைவர் நிர்மல் சகாயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.