அதிராம்பட்டினம்: உள்வாங்கிய கடல்.... மீனவர்கள் பீதி

அதிராம்பட்டினத்தில் 100 மீட்டர் கடல் பகுதி உள்வாங்கியதால் கரையில் நின்ற படகுகள் சேற்றில் சிக்கியது.;

Update: 2024-05-03 12:51 GMT

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கடல் பகுதியில்,  தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால், நாட்டுப்படகுகள் மூலம் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை படகுகள் நிறுத்துவதற்கான வாய்க்காலில், தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதன்படி மே 1ஆம் தேதி இரவு மீன்பிடிக்க சென்று விட்டு, நேற்று காலை 6 மணிக்கு கரைக்கு திரும்பினர். ஆனால் கடல் சுமார் 100 மீட்டர் துாரம் உள்வாங்கி இருந்தால், படகை துறைமுகத்திற்கு சேற்றில் இழுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பிறகு மூன்று மணி நேரம் கழித்து கடல் நீர் பெருக்கெடுத்து, முகத்துவார வாய்க்கால் வரை  நிரம்பியதால், மீனவர்கள் தங்களது படகுகளை மீண்டும் துறைமுக வாய்க்காலுக்கு கொண்டு வந்தனர்.

அடிக்கடி கடல் உள்வாங்கும் நிலையில், படகுகளை துறைமுக வாய்க்காலுக்கு கொண்டு செல்லும் வகையில், வாய்க்காலை ஆழப்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News