தீர்த்தமலை மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்ய கோரிக்கை
தீர்த்தமலை மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
தீர்த்தமலை
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தீர்த்தமலை மலைக்கோவிலில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதாவது: தீர்த்தமலை அடிவாரம் மற்றும் மலைக் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கழிப்பறைகள் பூட்டியுள்ளது. குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் பெண்கள் உடை மாற்றும் அறை சுகா தாரம் இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினார்.