விருதுநகரில் இளம் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகரில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-05 11:05 GMT
முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கல்லூரியில் மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இ

ந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: மக்களவை பொதுத் தேர்தல் 2024- எதிர் வரும் ஏப்ரல் -19 அன்று நடைபெறயுள்ளதை முன்னிட்டு, இந்த தேர்தலில் மாவட்டத்தில் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும், வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜனநாயகத்தில் வெளிப்படையான, நியாயமான முறையில் பொதுமக்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தெரிவு முறைதான் தேர்தல். அந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான ஒரே தகுதி 18 வயது பூர்த்தி அடையந்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான். 18 வயது நிரம்பியவர்கள் முதலில் வாக்களார் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். அதற்காக வருடத்தில் நான்கு முறை வாக்களர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்கள் நடைபெறுகின்றன.

வாக்களார் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் இணையதளம் வழியாக தங்களது வாக்களார் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொளள்லாம். வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.

இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

இன்று நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அதில் எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்வது இந்த தலைமுறைக்கான மிகப்பெரிய பிரச்சினையாக கூறப்படுகிறது. அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் நடைமுறை, வேட்பாளர்கள், வேட்பாளர்கள் தெரிவு செய்யும்முறை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News