''தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, மக்களவைத் தேர்தல் –2024 முன்னிட்டு ”தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு, தேர்தல் நாள் அன்று 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேரூராட்சி தூய்மை காவலர்கள், மகளிர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியானது வேலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி பேரூராட்சி அலுவலகம், கந்தசாமி கண்டர் பள்ளி வழியாக சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு சென்று உயர்நிலை பள்ளி சந்திப்பில் முடிவுற்றது. மேலும், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.