எல்.முருகன் மீது வழக்கு பதிவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-29 06:17 GMT

எல்.முருகன் மீது வழக்கு பதிவு 

நீலகிரி தனி தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கடந்த 25ம் தேதி எல்.முருகன் நீலகிரி வந்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மாலை 5 மணி அளவில் ஊட்டி அடுத்த கடநாடு கிரியுடையார் கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு கடநாடு சமுதாயக்கூடம் முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் நடத்துவதற்கு குறித்து எந்தவித அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அவருடன் இருந்த பா.ஜ.க., மாவட்ட தலைவர் மோகன்ராஜ், நிர்வாகிகள் ஜெகதீஸ், ராஜேஷ், யுவராஜ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் கூட்டம் நடத்துவதாக இருந்தால் தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி வாங்காததால் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.
Tags:    

Similar News