போலி கால்நடை மருத்துவர்களை கண்டறிந்தால் சட்டப்படி தண்டனை வழங்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை.

முறையான மருந்து சீட்டு மூலமே மருந்துகள் வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

Update: 2023-12-01 05:35 GMT

போலி கால்நடை மருத்துவர்களுக்கு மாவட்டம் ஆட்சியர் எச்சரிக்கை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

போலி மருத்துவர்களின் மருந்து சீட்டுகளுக்கு மருந்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். - போலி கால்நடை மருத்துவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்  என மாவட்ட ஆட்சியர் கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

கால்நடைகளுக்கு, ”கால்நடை மருத்துவ பேரவை” எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவுபெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல் போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. பெரம்பலூர் மாவட்டத்தில், சில இடங்களில் சினைஊசி போடுவதற்கு பயிற்சிபெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர் அவர்களில் சிலர் போலியான கால்நடை மருத்துவர் எனக்கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறு. செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினைஊசி போடுவதற்கு மட்டும் 3 மாதகாலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால், அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள். எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சைபெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுகவேண்டும். கால்நடை மருத்துவபேரவை பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு மட்டுமே மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்யப்படவேண்டும்.

போலி மருத்துவர்களின் மருந்து சீட்டுகளுக்கு மருந்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். போலி மருத்துவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி முதன்முறை 1,000 ரூபாய், இரண்டாவது முறை 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறுமாத கடுங்காவல்சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News