செயல்முறை விளக்கம் அளிக்க வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப் பதிவு எந்திர கிடங்கு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையிலும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும் வாக்குப்பதிவு எந்திர கிடங்கு திறக்கப்பட்டது. பின்னர் வருகிற நாடாளுமன்ற தேர் தலையொட்டி பயிற்சிக்கும் மற்றும் வாக்காளர்களின் விழிப்புணர்வுக்காகவும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் எண்ணிக் கையில் 10 சதவீதம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு உரிய போலீசார் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
வருகிற 18ந் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்படும் வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளின் தலைமை இடங்களில் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செயல்முறை விளக்கம் அளிக்க பிரத்தியேகமாக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகா அலுவலகங்களில் அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோ.குமரன், தாசில்தார் (தேர்தல்) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.