கன்னியாகுமரி படகுத்துறையில் தூர்வாரும் பணி
கன்னியாகுமரி படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுகிறது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை பார்வையிட 5 படகுகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது மணல் குவியல்கள் ஏற்படுவது வழக்கம். படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டுள்ளது.