எருமைப் பாலை பசும்பாலாக மாற்ற ரசாயனம் கலந்த விவசாயி...!
எருமைப் பாலை பசும்பால் போல காட்ட ரசாயன பவுடர் கலந்த பால் வியாபாரியிடம் இருந்து 40லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டையில் எருமைப் பாலை பசும்பால் போல் காட்டுவதற்காக ரசாயனப் பவுடரை கலந்த பால் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த 40 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில், பால் வியாபாரியான, வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் பாலில் பவுடர் ஒன்றை கலந்துள்ளார். இதை பார்த்த கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா சிராஜ் என்பவர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், இது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ராவுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். அவரின் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் வேல்முருகன் சுமார் 40 லிட்டர் பாலை பறிமுதல் செய்து அழித்தார்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா கூறுகையில், எருமை மாட்டுப் பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். பசு மாட்டுப் பால் சற்று இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்காக எருமைப் பாலை வாங்கி வந்த தங்கவேல், கேசரி பவுடரை சிறிது கலந்து இளம்மஞ்சள் நிறம் கொண்டு வர முயன்றுள்ளார். இருப்பினும் பால் மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.