நாமக்கல்லில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாமக்கல் நகரில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட பானிபூரி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Update: 2024-07-05 16:16 GMT

அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்லில் உள்ள பானிபூரி கடைகளில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா என உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் அருண் உத்தரவின்படி, நாமக்கல்லில் உள்ள பானிபூரி விற்பனைக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...

நாமக்கல் நகரம் மற்றும் நாமக்கல் வட்டாரம் ஆகிய பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பானிபூரி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

மற்றும் பானி பூரி உடன் வழங்கப்படும் சீரக தண்ணீரில் செயற்கை வண்ணங்கள் ஏதும் கலக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானி பூரி மற்றும் காலிபிளவர் சில்லி ஆகியவை சுமார் ஐந்து கிலோ பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனவும் அதை சேமித்து வைத்து பயோடீசல் தயாரிக்க வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நான்கு கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுத்தமாகவும், சுகாதாரமுறையிலும் பானிபூரி தயாரிக்க வேண்டும்.

மசாலா நீரில் செயற்கை நிறமி கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா். இது சம்பந்தமான ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News