மொபைல் போன் பறிப்பு நான்கு பேர் கைது !
ஒரகடம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்.
By : King 24x7 Angel
Update: 2024-03-12 08:43 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இரவு பணி முடிந்து திரும்பும், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, தாக்கி மொபைல் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. ஒரகடத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்த வந்த, வட மாநிலத்தவர்கள் சிலர், இரண்டு வாரத்திற்கு முன், ஒரகடம் ஏரி வழியே வேலைக்கு சென்றனர். அப்போது, பைக்கில் வந்த கும்பல், அவர்களை கட்டை மற்றும் காலி மது பாட்டில்களால் தாக்கி, மூன்று மொபைல் போன்களை பறித்து அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த புகாரின்படி, ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஒரகடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இரவு நேரங்களில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், ஒரகடம் அடுத்த, ஆப்பூர் பகுதியைச் சேர்ந்த, மணி, 24, பிரகாஷ், 23, லாரன்ஸ், 25, கண்ணன், 24 என்பதும். பிடிபட்ட நான்கு பேரும் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை மீட்டு முதலுதவிக்கு பின், கைது செய்தனர்.