அரசுவேலை வாங்கி தருவதாக மோசடி : தலைமை ஆசிரியர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7பேரிடம் ரூ.18.10 லட்சம் மோசடி செய்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலைமாவட்டம் வந்தவாசி தாலுகா சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ் (வயது 58) இவர் நல்லூர் கிராமத்தில் உள்ள ஆர்.சி. எம் அரசு நிதியுதவி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்னப்பன் மகள் சினேகா (வயது 27). டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். சினேகாவுக்கு வருவாய்த் துறையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக அந்தோணிதாஸ் கூறியுள்ளார்.
இதையடுத்து சினேகா விடம் 2 தவணையாக அந்தோணி 4 லட்சம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சினேகா பல முறைகேட்டும் பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சினேகா திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில்,
தலைமை ஆசிரியர் அந்தோணிதாஸ் நிதியுதவி பள்ளியில் கிளார்க் மற்றும் வருவாய்த் துறையில் ஆசிரிய பணி, ஆசிரியர் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் மொத்தம் 18.10 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.இதையடுத்து அவர் மீது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ் ஐ ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் சென்னாவரம் கிராமத்தில் இருந்து நல்லூர் பள்ளிக்குச் செல்ல பைக்கில் வந்தவரை புற்று கோவில் அருகே மறைந்திருந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்தோணிதாசை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள அந்தோணிதாஸ் விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.