எரிவாயு சிலிண்டர்... எடை குறைச்சலா இருக்குது !
சிலிண்டர்களின் எடை குறைவாக இருந்தால் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூரில் நடந்த நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிலிண்டர் நிரப்பும் இடங்களை ஆய்வு செய்து எடைகுறைவாக இருந்தால் எரிவாயு சிலிண்டர் ஏஜென்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது விநியோக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. டிஆர்ஓ தியாகராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- விளிம்பு நிலையில் உள்ள ஏழை மக்களுக்கும், விவசாய கூலி தொழிலா ளர்கருக்கும் 50% மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்பட்டது. அதன்பின் மானிய தொகை கழித்து சிலிண்டருக்கு தொகை வசூலிக்கப்பட்டது. அதற்கு பிறகு முழுத்தொகையும் நுகர்வோரிடம் வசூலித்து பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தற்போது யாருக்குமே எரிவாயு சிலிண்டர் மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. ரூ.300க்கு தொடங்கிய சிலிண்டர் விலை ரூ.1000 நெருங்கிவிட்டது. சிலிண்டர் மானியம் யார் யாருக்கு ? எவ்வளவு? என்பதை ஒன்றிய அரசு தெளிவாக செய்தித்தாள் மூலம் அறிவிக்க வேண்டும். திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதிகளில் சமையல் எரிவாயு பதிவு செய்தால் மூன்று அல்லது நான்கு நாட்களில் வழங்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் நுகர்வோரிடம் கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூல் செய்கி றார்கள். மேலும் பண்டிகை காலத்தில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என அன்பளிப்பு கேட்பதாக தஞ்சாவூர் நகர மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள எரிவாயு விநியோகஸ்தர்கள் அனைவரும், எலக்ட்ரானிக் தராசு மூலம் எரிவாயு சிலிண்டரை நுகர்வோர் கண் முன் எடை போட்டு வழங்க வேண்டும். பெரும்பாலான சிலிண் டர்கள் அரை கிலோ முதல் 1 கிலோ வரை எரிவாயு குறைவாக நிரப்பி விநியோகம் செய்வதால் விரைவில் தீர்ந்துவிடுவதாக இல்லத்தரசிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே மாவட்ட வருவாய் அலுவலர் சிலிண்டர் நிரப்பும் இடங்களை நேரில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து எடை மோசடி செய்யும் எரிவாயு சிலிண்டர் ஏஜென்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது விநியோக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சமையல் எரிவாயு அடுப்பு பழுது ஏற்படும் போது எரிவாயு முகவர்கள் மூலம் பணியாளர்கள் அனுப்பி பழுது நீக்கி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.