நகராட்சி மயானத்தில் கல்லறை தோட்டம்- பாஜக தர்ணா
குமாரபாளையம் நகராட்சி யில் கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. கடந்த அக். 31ல் நடந்த குமாரபாளையம் நகர் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனை, நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கு தந்தை பெஞ்சமின், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டி, நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மயான வளாகத்தில் கல்லறை தோட்டம் அமைக்க நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்டோர் இடத்தை ஆய்வு செய்தனர். இது பற்றிய தகவல் பரவியதால், நேற்று பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமையில் பாஜகவினர் பொக்லைனை செயல்படவிடாமல் தடுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தவமணி, வி.ஏ.ஒ. முருகன் ஆகியோர் இது குறித்து மேலிடத்தில் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க சொல்கிறோம், என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், தீர்மானத்தை ரத்து செய்யாவிட்டால், மீண்டும் போராட்டம் பெரிய அளவில் தொடரும் எனவும் கூறி பாஜகவினர் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காலை 07:00 மணி முதல் சுமார் நான்கு மணி நேரம் நடந்தது.இதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க. நிர்வாகிகள் சுகுமார், சரவணன், ராஜா, ஆவின் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.