பாஜக மூன்றாவது முறையும் வெற்றி பெற்றால் தேர்தலே இருக்காது
தஞ்சாவூரில் சிபிஐ எம்.எல். சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், டி.கே.எஸ். இளங்கோவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்;
வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக மூன்றாவது முறையும் வெற்றி பெற்றால், அதன் பிறகு தேர்தலே நடைபெறாது என தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் குறிப்பிட்டனர்.
தஞ்சாவூரில் சிபிஐ எம்.எல். சார்பில், "வீழ்க பாசிசம் - வெல்க இந்தியா" என்கிற பொதுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிபிஐ எம்.எல் அகில இந்திய பொதுச் செயலர் திபங்கர் பேசியது: கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு எந்த வரியும் குறைக்கப்படவில்லை.
மாறாக ஜி.எஸ்.டி. அதிக அளவில் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு வரிகளைக் குறைத்து, சலுகைகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதனால், இலங்கையைப் போன்று இந்தியாவும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்றார் திபங்கர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் பேசியது: வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், அதற்கு பிறகு தேர்தலே நடைபெறாது. பாஜகவினருக்கு மதவெறி மட்டுமல்லாமல் பாசிச வெறியும் பிடித்துள்ளது. மாநில உரிமைகளை மீட்க, வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் பேசியது: எந்த மாற்றத்தையும், மாறுதலையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் பாசிசவாதிகள். மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், சாதாரண மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக உலக கோடீஸ்வரர்களின் வாழ்க்கையில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்றால், அதன் பின்னர் தேர்தலே நடைபெறாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பெயரில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக் கொண்டு வரப்படும் என்றார்" முத்தரசன். திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: பாஜக ஆட்சியில் அகமதாபாத் என்பது பிரயாக்ராஜ் என்கிற பெயர் மாற்றம், முஸ்லிம் கோயில் இந்து கோயிலாக மாற்றம், ஆங்கிலேயர் காலத்து அரசமைப்புச் சட்டத்தை இந்தியில் பெயர் மாற்றம் ஆகிய 3 மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த பாசிசத்தை வீழ்த்துவதற்கு நாம் ஒன்றுபட்டு நிற்போம் என்றார் இளங்கோவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியது: சனாதனமும், கார்ப்பரேட்டும் கைகோர்த்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த இரண்டும் கூட்டு சேர்ந்திருப்பதுதான் பாசிசம். இதன் மூலம், கார்ப்பரேட் சக்திகள் இயற்கை வளம், கனிம வளம், பொதுத் துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பு போன்றவற்றை நிகழ்த்தி வருகின்றன. இந்த பாசிசத்தை விரட்டியடிக்க முடியும். மோடி அரசை தூக்கி எறிய இண்டியா கூட்டணி உருவாகியுள்ளது என்றார் திருமாவளவன். இக்கூட்டத்துக்கு சிபிஐ எம்.எல். மாநிலச் செயலர் பழ. ஆசைத்தம்பி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வீ. சங்கர், மாவட்டச் செயலர் டி. கண்ணையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.