திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.36 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி, கல்லுகுறுக்கி, பெத்ததாளப்பள்ளி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.36 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ஜல்ஜீவன் மெஷன் திட்டத்தின் கீழ் ரூ. 7 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஓகேனக்கல் குடிநீர் வினியோக பணிகள் மற்றும் குளோரின் அளவு குறித்தும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ. 2.40 இலட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 12 இலட்சம் 5 வீடுகள் கட்டுமான பணிகளையும், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சுபேதார் மேடு கிராமத்தில் விவசாயி திரு. குள்ளிமுனுசாமி என்பவரின் விவசாய நிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2 இலட்சம் மதிப்பில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு மண்கரை அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து கல்லுக்குறுக்கி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.ஜி.புதுார் முதல் கல்லுகுறுக்கி வரை சுமார் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ. 11 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பயனாளி திருமதி. முத்தம்மாள் அவர்களின் வீடு கட்டுமான பணிகள் மற்றும் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் குடிநீர் வினியோக பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேப்போல பொதுமக்களுக்கு குடிநீர் வினியோக பணிகள் தடையின்றி கிடைக்கவும், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அவர்கள் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கில் மேற்கொள்ள வேண்டி திட்டபணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சரவணன், திருமதி.தவமணி, ஒன்றிய பொறியாளர்கள் திருமதி.அன்புமணி, திரு.சத்தியநாராயனராவ், திரு.ஆசைதம்பி, மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.