வறட்சியால் போதிய தீவனம் இல்லை; இலவச தீவனம் கேட்கும் விவசாயிகள்

நீலகிரியில் கடும் வறட்சி காரணமாக, கால்நடைகள் போதிய தீவனம் இல்லாததால், ஆவின் பால் கொள்முதல் 40 சதவீதம் குறைந்தது.

Update: 2024-05-13 14:44 GMT

கால்நடைகள்

நீலகிரி மாவட்டத்தில் 73 ஆண்டுக்கு பிறகு 29 டிகிரி செல்சியஸாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் நீலகிரியில் கடந்த ஆண்டு பருவமழைகள் சரிவர செய்யவில்லை. இதேபோல் இந்த ஆண்டு கோடை மழை தாமதமாக துவங்கியுள்ளது.

இதனால் குந்தா உள்பட பல்வேறு அணிகளில் தண்ணீர் வரத்து குறைந்து மின் உற்பத்தி 20 சதவீதம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. விவசாய நிலங்களிலும் நீர்வரத்து இல்லாததால் விவசாய பணிகளுக்காக லாரிகளில் வாடகை தண்ணீர் வாங்கி விவசாயம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கடும் வறட்சியால் மசினகுடி பகுதியில் மாடுகள் தீவனமில்லாமல் உயிரிழந்தன. இதேபோல் மாடுகள் தீவனத்திற்காக குடியிருப்பு பகுதியில் இருந்து நீண்ட தூரத்துக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.

இதனால் இலவசமாக கால்நடை தீவனம் வழங்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் பல இடங்களில் மாடுகளுக்கு சரியான தீவனம் கிடைக்காததால் பால் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் தற்போது ஆவினுக்கு 40 சதவீத பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் ஜெயராமன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தினசரி பால் தேவை 18 ஆயிரம் லிட்டராக உள்ளது. இதில் பால்கோவா, பன்னீர், நெய் உள்ளிட்ட பால் உற்பத்தி உப பொருட்கள் நீங்களாக தினசரி 10 ஆயிரம் லிட்டர் பால் தேவை உள்ளது. வழக்கமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 94 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. 

 தற்போது வறட்சி காரணமாக பால் கொள்முதல் 6000 முதல் 6500 லிட்டராக குறைந்து விட்டது. ஆனாலும் ஆவின் மூலம் பால் விநியோகத்தில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக திருப்பூரில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு நிலமை சமாளிக்கப்பட்டு வருகிறது. கோடை முடிந்து மழை தொடங்கி விட்டால் மீண்டும் பால் உற்பத்தி அதிகரித்து இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இங்குள்ள 350 ஆவின் ஏஜெண்டுகள் மற்றும் 79 ஆவின் பாலகங்களுக்கு வழக்கம்போல் பால் மற்றும் பால் உப பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. 

இதேபோல் கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News