கேதார கௌரி விரதம்- திரளான பெண்கள் விரதமிருந்து சாமி தரிசனம்
Update: 2023-11-14 03:25 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்,முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கேதார கெளரி விரதத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். சிவபெருமானுக்கு உரிய அஷ்ட மகா விரதங்களில் முக்கியமானதாக கருதப்படுவது கேதார கௌரி விரதம். பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்டு அர்த்தநாரீஸ்வரராக ஒன்றுபட்ட நாளே கேதார கெளரி நாளாகும்.புரட்டாசி மாதம் அஷ்டமி நாளன்று தொடங்கும் இந்த விரதம் ஐப்பசி அமாவாசை தினத்தன்று நிறைவு பெறும். கேதார கௌரி விரதம் சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள தர்மராஜா கோயில், முத்து மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்பட்டது. இதில் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள்நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் விரதம் மேற்கொண்டனர். இதில்500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து நோன்பு பாத்திரத்தில் நோன்பு கயிறு,வெற்றிலை பாக்கு, பழம்,அம்மனுக்கு உகந்த அதிரசம், பழங்கள், தீபாராதனை பொருட்களுடன் பட்டு சேலை உடுத்தி கலந்து கொண்டனர். மஞ்சளில் பிள்ளையார் செய்து, சந்தனம், குங்குமம்,புஷ்பம், அருகு சார்த்தி விநாயகரை பிரார்த்தனை செய்து காமாக்யாதேவி அர்சுனன், கிருஷ்ணனுக்கு தீபாரதனை செய்து பின்னர் வீட்டிற்கு சென்று படையலிட்டு தீபாரதனை செய்து விரதத்தை நிறைவுசெய்தனர்.