சொக்கர் கோயிலில் மாசி மக தெப்போற்சவம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தெப்போற்சவ நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், ஆண்டு தோறும் மாசி மகம் மகா பிரம்மோற்சவம் விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகாரநந்தி, ஹஸ்தியாழம், காமதேனு, கைலாச, அன்னம், கற்பக விருட்சம், கிளி, யானை, ரிஷப வாகனம் மற்றும் பூப்பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது.
பிரம்மோற்சவ காலங்களில் ஒவ்வொரு நாளும், அதிகாலை முதல் திருவனந்தல் கால சாந்தி பூஜை, திக்பலி மற்றும் யாகசாலை பூஜைள், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள், பன்னிரு திருமுறை பாராயண நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. 7ம் நாளான நேற்று காலை அம்மன் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவிழாவின் 8 வது நாளான இன்று முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் நடைபெற்றது. தெப்ப தேரில் வீற்றிருந்த சுவாமிக்கு வெண் பட்டும், அம்மனுக்கு பச்சை பட்டும் சாற்றப்பட்டு வெட்டி வேர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சிவனடியார்கள் சங்கு முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, வான வேடிக்கைகளுடன், பக்தர்கள் முன்னிலையில் அம்பாள் சமேத சுவாமி தெப்பதேர் 7 முறை தெப்பத்தை சுற்றி வந்தது. இறுதிச் சுற்றில் தெப்ப தேரினுள் கர்நாடக இசையில் மங்கல வாத்தியம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காவல் துறையினர், ஊர்காவல் படையினர், தீ அணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.