ரயில்வே நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படும் மயிலாடுதுறை: போராட முடிவு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் சமீபகாலமாக மயிலாடுதுறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு:- விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Update: 2024-05-26 16:19 GMT

சங்க நிர்வாகி

. திருச்சி ரயில்வே கோட்டத்தில் சமீபகாலமாக மயிலாடுதுறை ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக ரயில் பயணிகளிடையே அதிருப்தி நிலவுகிறது. இதனைக் கண்டித்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விரைவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கூட்டமைப்பு நிர்வாகியும், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவருமான வேலு.குபேந்திரன் கூறுகையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி ஏற்கெனவே போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்

. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் முடிவான விஷயங்கள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது மயிலாடுதுறை-காரைக்குடி இடையே நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் இங்கு நிறுத்தப்பட்டு, திருவாரூரில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும், மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள பெட்டிகளையும் குறைக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை-மைசூர் ரயிலை வாரத்தின் ஏழு நாள்களும் இயக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையையும் ரயில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே, பல்வேறு வகைகளிலும் மயிலாடுதுறை ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, நாங்கள் ஏற்கெனவே ஒத்திவைத்துள்ள போராட்டத்தை பெருந்திரளாக மக்களைத் திரட்டி ரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக விரைவில் நடத்த உள்ளோம் என்றார். இதுகுறித்து ரயில்வே பயனாளர் கூட்டமைப்பு நிர்வாகி கணேசன் கூறுகையில், 2011-ஆம் ஆண்டுமுதல் திருவாரூர் லைன் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைமேடை 1 மற்றும் 2 உடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது. இதற்காக ரயில்வே நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.24 கோடி நிதி ஒதுக்கியும், மாவட்ட நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால், ரயில்வே சார்பில் ஜல்லி போன்றவற்றை இறக்கி வைத்துள்ளபோதும், பணிகள் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறது. இதன்காரணமாகவும், காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிச்செல்லும் ரயில்கள் 50-க்கு மேற்பட்ட முறை இயக்கப்படுவதாலும் மயிலாடுதுறைக்கு புதிய ரயில்கள் எதையும் கொண்டுவர முடிவதில்லை.

விழுப்புரம்-மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே இரட்டை வழித்தடம் அமைக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News