அருப்புக்கோட்டை நகராட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த அமைச்சர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 1.12 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரூ.1.12 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.7.57 கோடி மதிப்பில் புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்படி அருப்புக்கோட்டை நகராட்சி, நேதாஜி சாலையில் ரூ.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பூங்காவினையும், சாய்பாபா நகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினையும், ராமசாமிபுரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.28.28 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தினையும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு 24-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.57 கோடி மதிப்பில் புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுவதற்கு அடிக்க நாட்டினார். இந்த புதிய சந்தை வளாகம் 51 கடைகளுடன், ஏடிஎம் குடிநீர் சுத்திகரிப்பு அறை, ஓய்வு அறை, அலுவலகம், சமையலறை, உணவகம், கழிப்பறைகள், மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய சந்தை வளாக கட்டிடத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாண்புமிகு அமைச்சர் அறிவுறுத்தினார்.