ராமநாதபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

பாஜக அரசு 9 ஆண்டுகளில் ரூ. 7.50 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்

Update: 2024-02-18 13:15 GMT

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு திமுக சார்பில் உரிமை மீட்பு நாடாளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசும்போது,

சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டின் மூலம் 50 சதவீதம் தான் வெற்றி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் தான் நூறு சதவீதம் வெற்றி. எதிர்க்கட்சியாக இருந்தபோது கடந்த நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றோம். தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு ஓட்டு குறைந்தால்,

திமுகவின் செல்வாக்கு சரிந்தது என்பர். இது வரும் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும். கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் யார் என்பதை திமுக தலைவர் அறிவிப்பார். அவர் யாரை அறிவித்தாலும் அங்கு கருணாநிதி தான் வேட்பாளர் என்பதை முன்நிறுத்தி வெற்றி பெற வேண்டும்.

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அதிமுக விட்டுக்கொடுத்துவிட்டது. புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. நீட் தேர்வு நமக்கு தேவையில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வை அவர் அனுமிக்கவில்லை. அவரை பாராட்ட வேண்டும். தமிழக வெள்ளம் பாதிப்புக்கு ரூ. 30 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் நிதி கேட்டோம்,

ஒரு ரூபாய் கூட தரவில்லை. நாம் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் அதில் 28 பைசா தான் திரும்பி வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அதுவே ரூ.2 அல்லது ரூ. 3 ஆக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து 6 லட்சம் கோடி வரி கொடுத்ததில் மத்திய அரசு ரூ. 1.50 லட்சம் கோடியே திருப்பி தந்துள்ளது. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். அவர்களது வாலை ஒட்ட நறுக்குவோம். தமிழக மக்கள் நன்றாக சாமி கும்பிடுவர், ஆனால் திமுகவிற்கு தான் வாக்களிப்பர். இனிமேல் திமுக கட்சி நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். ஆளுநர் தபால்காரர் தான், அவர் மக்கள் பிரதிநிதியல்ல.

ராமநாதபுரம் வந்தபோது பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். அதேபோல் மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இப்படி வடை சுடுவதுதான் மோடியின் வேலை. ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மோடி விமானி இல்லாமல் கூட வெளிநாடு போவார், ஆனால் தனது நண்பர் அதானி இல்லாமல் போகமாட்டார். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் அதானியிடம் தூக்கி கொடுத்துவிட்டார்.

பாஜக அரசு 9 ஆண்டுகளில் சாலை அமைப்பது, ஆயுஷ்மன் பாரத் இன்சூரன்ஸ் திட்டம் என 7.50 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது. தமிழக மீனவர்களை ராணுவத்தை அனுப்பி காப்பாற்றுவேன் என்றார் மோடி. ஆனால் தினந்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி,

சுந்தரராஜ், மாணவரணி மாநிலத்தலைவர் ராஜீவ்காந்தி, எம்பி நவாஸ்கனி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News