நாமக்கல் கோழி நோய் கண்டறிதல், கண்காணிப்பு ஆய்வகத்தை ரூ. 10 கோடி மதிப்பில் தரம் உயர்த்த இராஜேஸ்குமார் எம்.பி வலியுறுத்தல்.
நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தை ரூ. 10 கோடி மதிப்பில் தரம் உயர்த்த வேண்டும் - மாநிலங்களவையில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வலியுறுத்தல்.
டெல்லி பாராளுமன்ற மாநிலங்களவையில் கூட்டத் தொட ர் நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் எனது கோரிக்கையை பரிசீலித்து, தமிழ்நாடு, நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்தை (PDDSL) கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நாமக்கல் தொகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தை (PDDSL) உலகத் தர ஆய்வகமாக (குளோபல் ஸ்டாண்டர்ட் ரெஃபரன்ஸ் லேபரேட்டரியாக) மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் கோழிப்பண்ணைத் தொழில் இந்திய அளவில் விவசாயப் பொருளாதாரத்தில் பங்களிப்பு இருந்தாலும், அதில் தமிழ்நாடு ஒரு முக்கிய மையமாக உள்ளது, நாட்டின் மிகப்பெரிய கோழிப்பண்ணைகள் நாமக்கல்லில் தான் உள்ளது. இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் முட்டை 90% உற்பத்தி செய்து வருகிறது. நோய் கண்டறிதல், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஏற்றுமதி சான்றிதழை வழங்குவதன் மூலம் கோழி நோய் சவால்களை எதிர்கொள்வதில் இங்குள்ள ஆய்வகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், கோழிப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், கணிசமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
சர்வதேச வர்த்தக தரத்தை பூர்த்தி செய்வதற்கும், அத்தகைய இழப்புகளைத் தடுப்பதற்கும், பி.எஸ்.எல் வசதிகளுடன் கூடிய தனி ஆய்வகக் கட்டிடம், உயிரி பாதுகாப்பு அலமாரிகள், நிகழ்நேர PCR மற்றும் சீக்வென்சர்கள் போன்ற மேம்பட்ட உபகரணங்களுடன் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தை (PDDSL) ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த வேண்டும்.
எனவே, மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் எனது கோரிக்கையை பரிசீலித்து, தமிழ்நாடு, நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்தை (PDDSL) கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகமாக மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவா் பேசியுள்ளார்.